உடையார்
4
காவிரியை மன்னர் கூர்ந்து பார்த்தார். வாட்டமாய் தீப்பந்தங்கள் உயர்த்தப்பட்டன. மிக மெல்லியதான வெளிச்சத்தில், மாட்டு வண்டியின் மேல் பகுதி சிறிதளவே தெரிந்தது.
"வரைபடங்கள்..." மன்னர் பதற்றத்தோடு கேட்டார்.
"பெட்டியில் வைக்கப்பட்டு, வண்டியோடு பிணைக்கப் பட்டிருக்கிறது..."
"வெள்ளம் அதிகரித்துக் கொண்டிருக்கிறதே..."
"ஆமாம். அங்கு கல் போட்டு கம்பு நட்டு வைத்திருக்கிறார்கள். கல் மீது ஏறி வண்டி புரண்டு விட்டது. ஏழு பெண்கள். ஏழு பெண்களையும் அக்ரஹாரத்துக்கு அழைத்துப் போய் விட்டார்கள். வண்டியை எப்படியாவது மீட்டாக வேண்டும். இல்லையெனில் பெட்டி பிளந்து, வரைபடங்கள் மூலைக்கொன்றாய் பறந்துவிடும்..."
"கயிறு போட்டு வண்டியை இழுக்க முடியாதா..."
"இழுத்தால் வண்டி உடைந்து விடலாம். தூக்கிக் கொண்டு வர வேண்டும். தலைக்கு மேல் வெள்ளம் போய்க் கொண்டிருக்கிறபோது, வண்டியை எப்படித் தூக்கிக் கொண்டு வருவது என்று புரியவில்லை.."
மன்னர் சரசரவென்று ஆற்றில் இறங்கினார். முழங்கால் நீரில் நின்று, தீப்பந்தத்தை வாங்கி, இடதும் வலதும் அசைத்துப் பார்த்தார். வண்டி எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்பதைத் துல்லியமாகப் புரிந்து கொண்டார்.
"பிரம்மராயரே... ஏற்றம் கட்டுங்கள்..." என்று உத்தர விட்டார்.
"மன்னரே." என்று பிரம்மராயர் கைகூப்பினார்.
"இங்கிருந்து பத்தடி தொலைவில் பனந்துண்டம் நட்டு, அதன் மீது ஏற்றத்தைக் கட்டி, அந்த ஏற்றத்தின் நுனியில் கயிறு கட்டி, வண்டியோடு பிணைத்து, இந்தப் பக்கம் அழுத்தி, வண்டியைத் தண்ணீரிலிருந்து மேலே தூக்கி, அப்படியே திருப்பி கரையில் ஏற்றி விடலாம். ஏற்றம் கட்டினால் தான் முடியும்..." மன்னர் வேகமாகவும் உறுதியாகவும் சொன்னார்.
"பனந்துண்டங்களுக்கு ஆள் போயிருக்கிறது. பனந்துண்டங் களைத் தடுப்பாகப் போடலாம் என்று திட்டமிட்டோம்.."
"இல்லை. தடுப்பெல்லாம் தாங்காது. வெள்ளம் வருகின்ற வேகத்தில் தடுப்பு எப்படிப் போடுவது? இப்போது ஆற்றில் பனந்துண்டங்களை இறக்க முடியாது. இந்த இடத்தில் எப்பாடுபட்டேனும் மூன்று, நான்கு துண்டுகளை இறக்கி, அதற்கு மேல் ஏற்றம் கட்ட வேண்டும். இரண்டு ஆள் உயர பனந்துண்டங்களை உடனே கொண்டு வரச் சொல்லுங்கள்."
கிராம மக்கள் நாலாபுறமும் ஓடினார்கள். 'இங்கு இருக்கிறது, அங்கே இருக்கிறது, அவரிடம் இருக்கிறது, இவரிடம் இருக்கிறது' என்று கத்தினார்கள்.
‘எவர் வீட்டிலிருந்தும் பனந்துண்டங்கள் எடுத்து வரவேண்டாம். கரையோரம் பனைமரம் இருந்தால் உடனே வெட்டி வீழ்த்துங்கள். நுனியைச் சீவுங்கள். புரட்டி பூமியில் நடுங்கள்..." என்று உரக்கக் கட்டளையிடுவதுபோல மன்னர் பேசினார்.
ஆட்கள் பிசாசாய்ப் பறந்தார்கள். கோடாலிக்கும், அரிவாளுக்கும் ஓடினார்கள். சில நொடிகளில், பனை மரத்தை பட்பட்டென்று அரிவாளால், கோடாலியால் வெட்டும் சத்தம் அந்தப் பிரதேசம் முழுவதும் கேட்டது. ஒரே நேரத்தில் நாலைந்து பேர்கள் சுற்றி நின்று வெட்டுகிறார்கள் என்று தெரிந்தது. பனைமரம் படபடவென்று சாய்ந்தது. தொடர்ந்து இலைகள் கழிப்பதை உணர முடிந்தது.
"வண்டியில் வந்தவர்கள் எங்கிருக்கிறார்கள்?” மீண்டும் வினவினார். மன்னர்
"ஏழு பெண்கள், ஏழு பேரும் தேவரடியார்கள். ஒரு பெண் மிகவும் சிறியவள். மயங்கி விழுந்து விட்டாள். அக்ரஹாரத்து அந்தணப் பெண்மணிகள் அவர்களை அழைத்துப் போயிருக் கிறார்கள். ஒரு பெண் இங்கே இருக்கிறாள். பெயர் இராஜராஜீ.."
மன்னர் தீப்பந்தத்துக்குச் சைகை செய்தார். தீப்பந்தம் அருகே வந்தது. எங்கே என்று அந்தப் பெண்ணைத் தேடினார். மரத்தின் பின்னிலிருந்து அந்தப் பெண் தன்னை முற்றிலும் வேட்டியால் போர்த்தியபடி வெளிவந்து, மன்னரை நிலம்பட வணங்கினாள். எழுந்து நின்றாள்.
"அட, இராஜராஜீ..." என்று மன்னர் வியப்போடு குரல் கொடுக்க, அவள் ஆமென்று தலையசைத்தாள்.
"மாமன்னர் உடையார் ஸ்ரீஇராஜராஜத்தேவர் வாழ்க... வாழ்க. சோழதேசம் வாழ்க வாழ்க...” என்று உரக்கச் சொல்லி மறுபடியும் முதுகுவளைத்து குனிந்து வணங்கினாள்.
“ஏதேனும் முக்கியச் செய்தி உண்டா இராஜராஜீ..''
"ஆமாம் மன்னா... வண்டிக்குள் மூன்று ஓலைக்குழல்கள் இருக்கின்றன. ஒன்று பிரம்மராயருக்கு... ஒன்று உங்களுக்கு.. ஒன்று எங்கள் அறிமுகக் கடிதம்.."
"இதைத் தவிரவும் வேறு ஏதேனும் செய்தி உண்டா இராஜராஜீ..." மன்னர் பிரியமாகக் கேட்டார்.
"இல்லை மன்னா... நாங்கள் அனைவரும் தஞ்சைக்குக் குடிபெயர்ந்திருக்கிறோம். எங்களுக்கு ஓலை வந்ததுபோல இன்னும் பல பேருக்கு ஓலை வந்திருக்கிறது. அவர்களும் பயணத்துக்குச் சித்தமாக இருக்கிறார்கள்...”
"நல்லது... அதிகம் காயம்பட்டு விட்டாயா... பயந்து விட்டாயா?" -மன்னர் ஆறுதலாக அவளுக்கு அருகே போய் பார்த்தார். அவள் முகத்தை உற்று கவனித்தார்.
தன் மேல் வேட்டியை மெல்ல விலக்கி, தோளில் பட்டிருந்த முள் காயங்களை இராஜராஜீ காட்டினாள்.
"ஏன் இன்னும் வைத்தியர் வரவில்லை.."
"சொல்லி அனுப்பியாயிற்று மன்னா..” - என்று மன்னரின் கேள்விக்குப் பிரம்மராயர் பதில் சொன்னார்.
"மன்னிக்க வேண்டும் இராஜராஜீ. உங்களையெல்லாம் நான் சரியானபடி வரவேற்கவே இல்லை. இப்படி வெள்ளம் வருமென்பது எனக்குத் தெரியவில்லை. நீங்கள் பழமர்நேரி பக்கம் எதற்காக வந்தீர்கள்..".
"திசை தப்பிவிட்டோம். திருவையாறு அருகே ஆறு தாண்ட வேண்டியவர்கள், இங்கு தாண்டிக் கொள்ளலாம்... அங்கு தாண்டிக் கொள்ளலாம் என்று இருட்டில் திசை மாறிப் போய் விட்டோம்..."
"அப்படியா... பகலில் பயணம் செய்திருக்கலாமே..." என்று மன்னர் சொல்லிவிட்டு, மீண்டும் காவிரி ஆற்றைப் பார்த்தார்.
பெரிய பனை மரம் ஒன்று, இருபது பேர் தோளில் சவாரி செய்தபடி மன்னரை நோக்கி வந்து கொண்டிருந்தது. மன்னர் விலகி வழி விட்டார். தீப்பந்தத்தை கரை மீது காட்டச் சொன்னார்.
வந்தவர்கள் களிமண் கரையில் இறங்கினார்கள். ஆற்றுக்கு நகர்ந்தார்கள்... மார்பளவு ஆழத்துக்குப் போய், கூரான முனையை தரையில் நட்டு, கயிறுபோட்டு அழுத்தினார்கள். வேறு சில மரங்களை அண்டக்கொடுத்தார்கள். உறுதியாய் நிற்க வைத்தார்கள். நீண்ட மூங்கிலை மேலே வைத்தார்கள். வளைய மடித்துப் பிணைத்தார்கள். இரண்டு பக்கமும் கயிறு கட்டி கயிற்றின் நுனியில் கொக்கி கட்டி, இரண்டு கயிறுகளையும் மாட்டு வண்டியோடு பிணைத்தார்கள். மூங்கில் நுனியில் தொங்கும் கயிறும் மாட்டு வண்டியோடு பிணைக்கப்பட்டது.
மூங்கிலின் அடிப்பாகத்தை அழுத்த, கயிறு விறைப் பாகியது. இன்னும் அழுத்த, மாட்டு வண்டி மெல்ல நீர் விட்டு மேலெழும்பியது. வண்டி நீர் விட்டு மேலெழும்பியதும், நடு ஆற்றில் நின்ற வேளாளர்கள், மாட்டு வண்டியின் கீழே அவசர அவசரமாக மூங்கில் கொடுத்துத் தூக்கினார்கள்.
ஏற்றத்தை மேலே இழுப்பதற்கு வாட்டமாய், மாட்டு வண்டியை இன்னும் அசைத்து மேலேற்றினார்கள். மீண்டும் மூங்கிலின் அடிப்பாகம் அழுத்தப்பட, மாட்டு வண்டி நீரை விட்டு வெளியே வந்தது. மேலே வந்து மெல்ல ஊசலாடியது.
ஊசலாடிய மாட்டு வண்டியைக் கை கொடுத்து தூக்கினார்கள். வளையத்தில் மாட்டப்பட்ட மூங்கில் மெல்ல திரும்பி கரை நோக்கி வர, ஆட்கள் இடப்பக்கம் நகர, மூங்கில் நுனி வலப்பக்கம் நகர்ந்து மாட்டு வண்டியை முழங்கால் ஆழ நீரருகே இறங்கியது.
இறக்கப்பட்ட மாட்டு வண்டியை நாற்பது ஐம்பது பேராய் அப்படியே வாங்கிக் கொண்டார்கள். தலைக்கு மேல் தூக்கினார்கள். அழுத்தி மெல்ல நகர்ந்து, கரையின் மீது கொண்டு போய் மாட்டு வண்டியை இறக்கினார்கள். மாட்டு வண்டியின் மேல் பகுதி நசுங்கியிருந்தது. சக்கரம் பழுதடைந் திருந்தது, ஏர்க்கால் திரும்பியிருந்தது. அடிப்பக்கப் பெட்டி மட்டும் அப்படியே அசையாமல் இருந்தது.
மன்னர் மாட்டு வண்டியின் அருகே போய்ப் பார்க்க, மற்றவர்கள் விலகிக் கொண்டார்கள். பெட்டியை மன்னர் விடுவிக்கச் சொல்ல, இரண்டு பேர் உள்ளே போய் கயிற்றை அறுத்து, பெட்டியை வெளியில் கொண்டு வந்தார்கள். பெட்டியை நெட்டுக்குத்தலாய் நிற்க வைக்க, உள்ளிருந்து நீர் பொங்கி வந்து தரையை நனைத்தது.
"இராஜராஜீ, குழல்கள் எங்கே?" என்று மன்னர் கேட்க, இராஜராஜீ மாட்டு வண்டியின் அருகில் தீப்பந்தத்தை வைத்துப் பார்த்தாள்.
துணியால் மூடப்பட்டிருந்த மேற்கூரைக்குள் கைவிட்டு மூன்று ஓலைக் குழல்களை 'வெளியே' இழுத்தாள். தீப்பந்த வெளிச்சத்தில் அடையாளம் பார்த்து, 'இது அறிமுகக்கடிதம்; 'இது உங்களுக்கு'; 'இது பிரம்மராயருக்கு' என்றும் பிரித்துக் காட்டினாள்.
"பிரம்மராயருக்கான ஓலையை அவரிடமே கொடுத்து விடு..." என்று மன்னர் அதைத் தொடக்கூட செய்யாமல், மற்ற இரண்டு ஓலைகளை மட்டும் வாங்கிக் கொண்டு, தனியே நடந்து போனார்.
0 Comments