உடையார் third Chapter Part 3

உடையார்

3

       "என்ன இருக்கிறது அந்தக் குழலில்?"

       "ஒரு குழலில் எங்களைப் பற்றிய அறிமுக ஓலை இருக்கிறது. இன்னொரு குழலில் அரசர் உடையார் ஸ்ரீ இராஜராஜத்தேவருக்கு ஒரு ரகசியச் செய்தி இருக்கிறது..."

       "மூன்றாம் குழலில் என்ன இருக்கிறது?”

       'மயிலை வணிகர்களின் சங்கத்தலைவர் உங்களுக்குக் கொடுத்த ஒரு ஓலை இருக்கிறது..."

       பிரம்மராயர் திகைத்துப் போனார். 'கடவுளே, இவ்வளவு பெரிய பொக்கிஷத்தையா ஆற்றில் விட்டெறிந்துவிட்டுக் கரை யேறி இருக்கிறீர்கள்?' என்று மனதில் நினைத்துக்கொண்டார்.

       "இதைத் தவிரவும் ஒரு ஓலை என் இடுப்பில் தனிக் குழலில் ரகசியமாக வைத்திருக்கிறேன். அந்த ஓலையை இளவரசர் இராஜேந்திரர் உங்களைப் பார்த்து எவரும் அறியாத வண்ணம் கொடுக்கச் சொன்னார்..."

       தாழ்ந்த குரலில் அவருக்கு மட்டும் கேட்கும் வண்ணம் இராஜராஜீ பேசினாள்.

       ஓலை இருப்பதை எவரும் அறியா வண்ணம் அவருக்குச் சுட்டிக்காட்டினாள். பிரம்மராயர் முகத்தைச் சாதாரணமாக்கிக் கொண்டார்.

       "நல்லது... வேறு சில முக்கியப் பொருள்களும் மாட்டு வண்டியில் இருப்பதால் பெட்டி அடிபடாமல் மாட்டு வண்டியோடு கரையேற வேண்டும். எத்தனை வீரர்கள் தேவைப்பட்டாலும் உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள்.

       அருகே இருக்கிற எல்லா கிராமத்திற்கும் போய் ஆட்களை அழைத்து வாருங்கள். கயிறுகளோடும். நீண்ட மூங்கில்களோடும் வாருங்கள். எது தேவையென்று உங்கள் மனத்திற்குப் படுகிறதோ...அத்தனையும் எடுத்துக் கொண்டு வாருங்கள். நல்ல கொக்கிகள், இரும்புக் கம்பிகள் நமக்குத் தேவைப்படும். மூங்கில் இணைப்பதற்கு சிறு சிறு கயிறுகளும் அவசியமாகும். எல்லாம் திரட்டிக் கொண்டு வாருங்கள்.

       எவரும் எந்தக் கிராமத்திலும் தூங்கக்கூடாது என்று உத்தரவிடுங்கள். கிராமத்திலுள்ள அதிகாரியை எழுப்பி பறையை அடிக்கச் சொல்லுங்கள். சங்கு முழக்கச் சொல்லுங்கள். அவசர எக்காளம் ஊதச்சொல்லுங்கள். இன்னும் தீப்பந்தங்கள் தேவை. அதற்கும் ஏற்பாடு செய்யுங்கள்..." பிரம்மராயர் உரத்த குரலில் கட்டளையிட்டார்.

       ஆட்கள் நாலாபக்கமும் பறந்தார்கள். தீப்பந்தங்கள் இன்னும் அதிகமாயின. கிராமம் ஜெகஜோதியாகியது. எக் காளம் முழங்கப்பட்டது. அவசரம் என்று சொல்லும் சிறுபறை அறிவிக்கப்பட்டது. மற்ற ஊர்களிலிருந்து தீப்பந்தங்கள் எடுத்து வரப்படுவது தெரிந்தது. திருக்காட்டுப்பள்ளிக்கு ஒருவர் குதிரையில் ஏறி படையோடு வருவதாகச் சொல்லிப் போனார்.

       "ஐயா, முதலில் மாட்டு வண்டியைப் பெட்டியோடு பத்திரப்படுத்துவது முக்கியம்...." மறுபடியும் படகோட்டி உரக்கச் சொன்னான்.

       "ஆட்கள் வந்து சேருவதற்குள் மாட்டு வண்டி நிச்சயம் மூழ்கிவிடும். மாட்டு வண்டி மூழ்கிவிட்டால், வெள்ள வேகத்தில் ஒருவேளை புரளக்கூடும். எனவே, மாட்டு வண்டி வெள்ளத்தால் அடித்துச் செல்லப்படாமல் இருப்பதற்கு, பனைகளால் வெள்ளத் தடுப்பு ஏற்படுத்தலாம்.

       பனந்துண்டங்கள் எல்லா கிராமங்களிலும் இருக்கின்றன. பனந்துண்டங்கள் வரவேண்டுமென்று சொல்லுங்கள். பனந் துண்டங்களின் அடிப்பகுதியைக் கூராக்கி ஆற்றில் இறக்கி, சுத்தியால் அடித்து தடுப்புச் சுவர் ஏற்படுத்தலாம்.." என்று படகோட்டி உரக்கச் சொன்னான். அவனை நோக்கி ஆசீர்வதிப்பதுபோல் பிரம்மராயர் கையுயர்த்தினார்.

       "நல்லது... அந்த இளைஞன் தெளிவாகப் பேசுகிறான். பனந்துண்டங்களைக் கொண்டு வரச் சொல்லுங்கள். மாட்டு வண்டியிலிருந்து ஒரு கோல் தூரத்தில் பனந்துண்டங்களை அடித்து இறக்குங்கள். மாட்டு வண்டி புரளாமல் காப்பாற் றுங்கள்..." என்று கட்டளையிட்டார்.

       அந்தண இளைஞன் சட்டென்று திரும்பினான்.

       "ஐயா... ஒரு குதிரை வீரனைக் கல்லணைப் பக்கம் அனுப்பி அங்குள்ள மதகுகளை மூடச்செய்தால் வெள்ளம் வருவது குறைந்து போகும் அல்லவா...? வெள்ளத்தை இங்கு தடுப்பதற்கு முன்பு கல்லணையிலேயே தடுத்து விடலாம் அல்லவா..."

       "அதுவும் நல்ல யோசனைதான்... யாரங்கே... ஒரு ஓலை கொண்டு வா.."

       ஓலையும், எழுத்தாணியும் கொண்டு வரப்பட்டன. வெகு வேகமாக ஓரே வரியில் பிரம்மராயர் உத்தரவு எழுதினார் கையொப்பமிட்டார். கிராமத்துத் தலையாரியிடம் கொடுத்து குதிரையேறி கல்லணைக்கு ஓடச் சொன்னார்.

       ஊர்களிலிருந்து மக்கள் வரவும், கல்லணையிலிருந்து நீர் வரத்து நிற்கவும் இன்னும் நான்கு நாழிகையாவது ஆகிவிடும் என்று தோன்றியது. அதற்குள்ளாக வண்டி புரளாமல் இருக்க வேண்டும். பெட்டி உடையாமல் இருக்க வேண்டும். எப்படியாவது வண்டியைக் காப்பாற்றி விடவேண்டும்.

       அந்த அந்தண இளைஞனை பிரம்மராயர் தோள் தொட்டுத் திருப்பினார்.

       "நீ இடுப்பில் கயிற்றைக் கட்டிக்கொண்டு நீரில் இறங்கு... மூன்று, நான்கு கயிறுகளால் பெட்டியையும், மாட்டு வண்டியையும் இறுகப் பிணைத்து விடு. வண்டி நம் கைவசம் இருக்கட்டும். வெள்ளம் அதிகரித்து வண்டியை நழுவவிட்டோ மானால் எங்கு போய் கண்டு பிடிப்பது..?” என்று கவலையோடு பேசினார்.

       அந்த இளைஞன் கயிறை இடுப்பில் கட்டிக் கொண்டு நீரில் இறங்கினான். எதிர்நீச்சல் போட்டு வண்டியை நோக்கி நீந்தினான். வண்டியின் சக்கரத்தைப் பற்றி கொண்டான். வண்டி மீது ஏறி நின்றான். மற்றவர்கள் கவலையோடு அவனைப் பார்த்தார்கள்.

       இடுப்பில் கட்டிக் கொண்டிருப்பது மெல்லிய கயிறு என்பதால் அதை மடமடவென்று இழுத்தான். மெல்லிய கயிறின் முனையில் தடித்த கயிறைக் கட்டி அனுப்பினார்கள். தடித்த கயிறு அவனை நோக்கிப் போயிற்று.

       அவன் அந்தக் கயிறறால் மாட்டு வண்டியின் சக்கரத்தை இறுகக் கட்டினான். இன்னொரு ஆளை வரும்படி சைகை செய்தான்.

       காலை உந்தி மாட்டு வண்டியிலிருந்து நீரில் குதித்தான். அவன் குதித்தபோது அவனின் உந்துதல் வேகத்தால் மாட்டு வண்டி இப்போது மல்லாக்கச் சாய்ந்தது. இரண்டு சக்கரங்களும் மேலே இருந்தன. மாட்டு வண்டியின் கூரைப் பகுதி நீரின் அடிப்பக்கம் போயிற்று. மாட்டு வண்டி வெள்ளத்தில் ஆடத் துவங்கியது. கரையிலுள்ளோர்கள் 'ஐயோ' என்று ஓரே குரலாய்க் கத்தினார்கள். பிரம்மராயர் கவலையானார்.

       கரையோரச் சாலையில் குதிரைப்படை ஒன்று வருகின்ற சப்தம் கேட்டது. மூன்று தீப்பந்தங்கள் வந்தன. 'திருக்காட்டுப் பள்ளிபடைகள் வந்துவிட்டன' என்று யாரோ உரக்கச் சொன்னார்கள்.

       திடீரென்று எக்காளம் ஊதப்பட்டது. எக்காளச் சப்தம் கேட்டதும் எல்லோரும் சுறுசுறுப்பானார்கள். அது உடையார் ஸ்ரீ இராஜராஜத்தேவர் வருகிறார் என்கிற எக்காளம்.

மேலும் படிக்க...

Post a Comment

0 Comments