உடையார்

4

 

       உலர்ந்த வைக்கோல் போரில் திடீரென்று நெருப்பு பிடித்ததுபோல் அந்த இடம் பரபரப்பாகியது. பழமர்நேரி மக்கள் விரைந்து, நாலா பக்கமும் நகர்ந்து வளையமாகி, மன்னர் உடையார் ஸ்ரீஇராஜராஜத்தேவர் வருவதையே வியப்போடு பார்த்தார்கள்.

       மன்னரின் கவசப்படையைச் சேர்ந்த ஒருவன், நிலைமையை சகஜமாக்கக் கருதி, 'மன்னர் உடையார் ஸ்ரீ இராஜராஜத்தேவர்' என்று உரக்கக் குரல் கொடுக்க, 'வாழ்க வாழ்க' என்று கிராமவாசிகள் சேர்ந்து குரலெழுப்பினார்கள்.

       கிராம அதிகாரி ஒருவன் சட்டென்று முன் வந்து.

       "திருமகள்போல பெருநிலச் செல்வியும் தனக்கே உரிமை பூண்டமை மனக்கொள காந்தளூர் சாலை கலமறுத் தருளி...

       என்று உடையாரின் மெய் கீர்த்தி பாட, சட்டென்று இடது கையை உயர்த்தி, அந்தக் கிராம அதிகாரியைப் பார்த்து, மெய்கீர்த்தி வேண்டாம்' என்பது போல் இராஜராஜன் சைகை” செய்தார்.

       மெய்கீர்த்தி நிறுத்தப்பட்டது. மெய்க்கீர்த்தி சொன்ன வனை எல்லோரும் சற்று கேலியாகப் பார்தார்கள். இது என்ன அரச சபையா... இல்லை வேறு ஏதேனும் சபை மண்டபமா, ஆற்றங்கரைதானே... இரவு நேரத்தில் இங்கெல்லாமா மெய்கீர்த்தி பாடுவது' என்பது போல் மக்கள் மெய்கீர்த்தி கூறியவனை வியப்பாகப் பார்த்துக் கேலி செய்தார்கள். முணுமுணுத்தார்கள்.

       மீண்டும் அங்கு ஏற்பட்ட நிலைமையைத் தளர்வு செய்யக் கருதி, கவசப்படையைச் சேர்ந்தவன் உடையார் ஸ்ரீ இராஜராஜத்தேவர்' என்று உரக்கக் கத்த, 'வாழ்க, வாழ்க' என்ற கோஷம் உரக்க எழுந்தது, எல்லாரிடமும் எல்லா சிந்தனைகளும் கலைந்து, மறுபடியும் மன்னர், மீது ஒருமுகப்பட்டன.

       மன்னர் குதிரையிலிருந்து இறங்க முயற்சித்தபோது, ஒருவன் சட்டென்று கீழே குனிந்து தோள் கொடுக்க முன் வந்தான். மன்னர் அவனை 'நகர்ந்து போ' என்று சைகை செய்து, குதிரையைச் சற்று அப்பால் நகர்ந்த, அவன் எழுந்து கொண்டான்.

       இடக்காலை சேணத்தில் ஊன்றி, வலக்காலை வீசிப் போட்டு மன்னர் கீழிறங்கினார். இறங்கி, இடுப்பை இடதும் வலதும் அசைத்து தளர்வாக்கிக் கொண்டார். குதிரையைத் தட்டி அப்புறப்படுத்தினார். மக்களை நோக்கி நடந்தார்.

       மக்கள் கூட்டம் சலசலத்தது. காற்றில் ஆடும் நெற்கதிரைப் போல நெளிந்தது.

       அவர்களை அருகே வரும்படி மன்னர் சைகை செய்ய, அவர்கள் வேகமாய் மன்னரை நோக்கி நகர்ந்தார்கள். மன்னர் அந்தக் கூட்டத்தில் ‘தனக்கு யாரையெல்லாம் தெரியும்' என்பதுபோல் உற்றுப் பார்த்தார்.

       மன்னர் மேலிருந்து சந்தன வாசனை வீசிக் கொண் டிருந்தது. மத்திம வயதைத் தாண்டிய மன்னர், மேல்முதுகுவரை முடி வளர்த்தார். தலையைச் சுற்றி தலைப்பாகை கட்டி இறுக்கியிருந்தார். கழுத்தில் கம்பியாய் ஒரு வடமும், வடத்தினடியில் ஒரு உருத்திராட்சமும் கோர்த்திருந்தார்.

       அதைத்தவிர நீண்ட சங்கிலியும், சங்கிலியில் பொற் பதக்கமும் நெஞ்சைத் தழுவிக் கொண்டிருந்தன. பொற் பதக்கத்தில் பாயும் புலியின் உருவம் செதுக்கப்பட்டிருந்தது. காதில் உருளைக் குண்டலங்கள் போட்டிருந்தார். புஜங்களில் பொன்னாலான கேயூரங்கள் அணிந்திருந்தார்.

       மணிக்கட்டில் வெள்ளிப் பட்டயத்தை இறுக்கிக் கட்டியிருந்தார். இடுப்பில் தார் பாய்ச்சி வேட்டி. கட்டி, அதன் மீது சிகப்புத் துண்டு போட்டு இறுக்கி, தோளில் ரத்தினச் சால்வை போர்த்தியிருந்தார்.

       மெல்லிய மீசையும், கூரான மூக்கும், அழகிய கண்களும் செழுமையான கன்னங்களும், உறுதியான முகவாயும் மன்னரைப் பேரழகனாகக் காட்டின.

       மன்னர் அங்கு தெரிந்த முகங்களைப் பார்த்து ‘நலமா' என்று விசாரித்தார். மன்னருக்கு அவர்களின் பெயர் தெரியாது. ஆனால் அடையாளம் தெரியும். கிராம அதிகாரிகளை எளிதில் இனங்கண்டு கொள்வார். 'இந்த கிராமம்தானே...' என்று சரியாக கிராமத்தின் பெயரும் சொல்வார்.

       மன்னர் அம்மாதிரி மூன்று நான்கு அதிகாரிகளை விசாரித்தார். ஒரு வாலிபனைச் சுட்டிக்காட்டி, 'உன்னை நினை விருக்கிறது' என்றார். மன்னர் இனங்கண்டு கொண்டவர்கள் முகத்தில் பெருமிதம் வழிந்தது. மற்றவர்கள் தாபத்துடன் மன்னரைப் பார்த்தார்கள். கூட்டம் மீண்டும் சலசலத்தது.

       பிரம்மராயர் கவலையோடு திரும்பி காவிரியைப் பார்த்தார். அந்தப் படகோட்டி முழங்காலளவு ஜலத்தில் நின்று கொண்டிருந்தான். நீரை அளவெடுப்பதுபோல் கைக்கோலை காவிரியில் ஊன்றியிருந்தான். பிரம்மராயர் பார்த்ததும் தண்ணீர் மேலேறுகிறது என்று சைகை செய்தான். பிரம்மராயர் அவனைப் பார்த்துத் தலையாட்டினார். திரும்பி கவலையோடு மன்னரைப் பார்த்தார்.

       'இந்த வேளையில் எந்த முன்னறிவிப்புமின்றி மன்னர் இங்கு வந்திருக்கிறார் என்றால் என்ன அர்த்தம்? இந்த வண்டிகள் இங்கு வரப்போவது மன்னருக்குத் தெரியுமா?

       வண்டிகளில் வருபவர்களை எதிர்கொள்வதற்காக மன்னர் இங்கு வந்திருக்கிறாரா.. அல்லது வண்டியில் வருகின்ற பொருளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆவலில் வந்திருக்கிறாரா.. அப்படி அந்த வண்டியில் என்ன வருகிறது? அந்த வரைபடங்கள் உள்ள பெட்டி முக்கியமா... இல்லை ஓலைச் சுருளா? அந்த ஓலைச்சுருளில் என்ன இருக்கிறது... யாருடைய செய்தி... எவருக்கு அந்தச் செய்தி..'

       பிரம்மராயர் கவலையானார். தான் அறியாமல் இந்த சோழ தேசத்தில் ஒரு கல்லும் உருளக்கூடாது என்று நினைத்துக் கொண்டிருக்கிற வேளையில், மன்னரே எந்தவித முன்னறி விப்புமின்றி கிராமம் கிராமமாக நகர்கிறார் என்பது மிக மிக கவலைக்குரிய விஷயம்.

       சோழ தேசத்தின் அரசாட்சி தளர்வாக இருக்கிறது என்று அர்த்தம். கட்டுக்கோப்பு குறைந்து வருகிறது என்று பொருள்.

       பிரம்மராயர் ஆழ்ந்த சிந்தனையில் இறங்கினார். மன்னரை மக்களிடமிருந்து நகர்த்தி, திரும்பி காவிரியைப் பார்க்க வைக்கவேண்டும் என்று திட்டமிட்டார். தொண்டையைக் கனைத்தார்.

       "யாரது... பிரம்மராயரா..." - மன்னர் சட்டென்று கனைப்பு வந்த திசையை நோக்கித் திரும்பி உற்றுப் பார்த்துக் கேட்டார்.

       தீப்பந்தங்கள் சட்டென்று பிரம்மராயரைச் சூழ்ந்து கொண்டன. பிரம்மராயர் மன்னருக்கு வணக்கம் சொன்னார். மன்னர் ஆவலாக பிரம்மராயரை நோக்கி வந்தார்.

        “என்ன சொட்டச் சொட்ட நனைந்திருக்கிறீர்கள்... ஆற்றில் இறங்கினீர்களா?" மன்னர் அருகே வந்து, பிரம்மராயரின் கரங்களைப் பிடித்தவாறு சற்றுக் கவலையாகக் கேட்டார்.

       "ஆமாம். வண்டி ஒன்று ஆற்றில் கவிழ்ந்து விட்டது. கூச்சல் கேட்டதும் இறங்கி, வண்டியிலிருந்தவர்களைக் காப்பாற்றி விட்டோம். வண்டி அங்கேயே கவிழ்ந்து கிடக்கிறது. எதிர்க் கரையில் மூன்று வண்டிகளும் ஆட்களும் இருக்கிறார்கள்.”

       "இதைச் சொல்லத்தான் நான் உங்கள் வீட்டிற்கு வந்தேன். எனக்கு அப்பொழுதுதான் தகவல் வந்தது.

       'காஞ்சி மாநகரிலிருந்து தஞ்சைக்காக தேவரடியார்களிடம் கோவில் பற்றிய வரைப்படங்களும் வருகின்றன. இதைத் தவிர வேறொரு முக்கியச் செய்தியும் நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறது' என்று ஒரு குதிரை வீரன் சொன்னான். வழியில் வெள்ளத்தில் சிக்கி குதிரை ஓடி விட்டதாம். இவன் நீந்திக் கரையேறி, கால்நடையாக தஞ்சை வந்திருக்கிறான்.

       இதைத் தெரிவிக்க உங்கள் வீட்டிற்கு ஆள் அனுப்பிய போது, நீங்கள் அப்போதுதான் அவசரமாகக் கிளம்பியிருக் கிறீர்கள் என்று தகவல் வந்தது. உடனே என்ன என்ற பதற்றத்தில் நானும் கிளம்பி விட்டேன். வெண்ணாற்றங்கரையைத் தாண்டி நீங்கள் திருக்காட்டுப்பள்ளிப் பக்கம் போனதாகச் சொன்னார்கள். எனவே, இந்தப் பக்கம் திரும்பி விட்டேன். மாட்டு வண்டி எங்கே?"

மேலும் படிக்க...