உடையார் third Chapter Part 2

உடையார்

3

       மெல்ல மெல்ல உங்களைப் பேச வைப்பதற்காகவே, நீங்களாகவே உளறி உங்கள் தவறை ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே நான் காத்திருந்தேன்.

       ஐந்து வருடங்கள்தான் உங்கள் கூட்டத்தால் இறுக்கமாக இருக்க முடிந்தது. பிள் 'நாங்கள்தான் கொன்றோம்' என்று தம்பட்டமடிக்க ஆரம்பித்து விட்டீர்கள். எப்படி, எதற்காக, ஏன் என்றெல்லாம் நான் தீர விசாரித்து விட்டேன்.

       இங்குள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் கூட இந்தக் கொலையில் பங்கிருக்கிறது என்பதை நான் அறிந்தேன். உங்கள் வீரத்தை, உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் பெருமைபட கூற ஆரம்பித்து விட்டீர்கள். உங்கள் குழந்தைகள் அதை மற்றவர் களுக்குச் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.

       நீங்கள் தேக்கி வைத்திருந்த ரசுசியம் உங்களாலேயே உடைபடும் வரை நான் காத்திருந்தேன். ஒன்றிரண்டு பேரைத் தண்டித்தால், மீண்டும் உங்களிலிருந்து ஆட்கள் கிளம்புவார்கள். உங்கள் கூட்டம் முழுவதையும் தண்டிக்க விரும்பியே நான் இத்தனை காலம் காத்திருந்தேன். இது எனக்கொரு நல்ல வாய்ப்பு.

       தயவுசெய்து வாள் உருவி உங்களை வெட்டிப் போடுவதற்கு முன்பு, உங்கள் பெண்களை அவமானப்படுத்து வதற்கு முன்பு இந்த இடத்தை விட்டு விரைவாகப் போய்விடுங்கள். எவ்வளவு விரைவாகப் போகிறீர்களோ, அவ்வளவு நல்லது, என்னால் மக்களை வெகுநேரம் கட்டுப் படுத்தி வைத்திருக்க முடியாது.." என்று கூறினார்.

       மக்கள் அப்பொழுதே ஆத்திரமானார்கள். உரக்கக் கத்தத் துவங்கினார்கள். உடையார் ஸ்ரீ இராஜராஜத்தேவர் மக்களைக் கட்டவிழ்த்து விடலாமா என்று யோசித்து, பிரம்மராயரை நோக்கி உற்றுப் பார்த்தார்.

       பிரம்மராயர் வேண்டாம் என்று தலையசைத்ததும், தனது தனிப்பட்ட காவல்படையை அவர்களைச் சுற்றி நிற்க வைத்து அப்பொழுதே- அங்கிருந்தபடியே ஒரு பொருளும் எடுத்துக் கொள்ளப்படாமல் அவர்களை வெளியேற்றினார். மௌனமாய் அந்தக் கூட்டம் வெளியேறியது.

       கிராமம் முழுவதையும் மக்கள் தீக்கிரையாக்கினார்கள், மக்களின் கோபத்தை, ஆவேசத்தைக் கண்டபோது மன்னர் கோபத்தோடு சிரித்தது இன்றும் ஞாபகமிருக்கிறது, முதன் முறையாய் வாழ்க்கையில் ஒரு மனிதன், சிரிப்பதில் கோபத்தைக் காட்டியதை பிரம்மராயர் கவனித்தார். ஆனால் அன்று இரவே சோழ மன்னர் ஸ்ரீ இராஜராஜத்தேவர் சகஜமாகிவிட்டார்.

       அன்றுதான் காஞ்சி மாநகருக்கு ஓலை அனுப்பி, பல்வேறுவிதமான கோவில் படங்களை ஓவியமாக வரைந்து அனுப்பச் சொல்லியிருந்தார். அந்தப் படங்கள் தேவரடியார் மூலம் இங்கு மாட்டு வண்டியில் வத்திருக்கிறது. தாள் வந்த வண்டி கவிழ்ந்து நீரில் ஒருக்கனித்துக் கிடக்கிறது. பெட்டியின் கதி என்னவாயிற்றோ தெரியவில்லை.

       பிரம்மராயர், பழமர்தேரி படித்துறைக்குப் போனார், தீப்பந்தங்கள் அதற்குள் அரச மரத்தடியில் நட்டு வைக்கப் பட்டிருந்தன.

       பெண்களை 'யார், என்னது' என்று அந்தணர்களும், வேளாளர்களும் விசாரித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் கமலக்கண்ணனைப் பார்த்துவிட்டு, 'வாருங்கள், வாருங்கள்' என்று கைகூப்பினார்கள்.

       கமலக்கண்ணன், பின்னால் நடந்து வந்த பிரம்மராயரைச் சுட்டிக் காட்டவே, எல்லோரும் தீப்பந்தத்தைப் பிடுங்கி பிரம்மராயரின் முகத்தைக் காண வெளிச்சம் காட்டினார்கள்.

       பிரம்மராயர் ஒற்றையடிப் பாதையிலிருந்து மேடு ஏறி கரைக்கு வந்ததும், கால் தொட்டு நமஸ்காரித்தார்கள். இடுப்பில் மேல் துணியை இறுகக் கட்டிக் கொண்டார்கள். 'வருக, வருக' என்று சொன்னார்கள்.

       "ஒரு வார்த்தை எங்களிடம் சொல்லியிருக்கக்கூடாதா? ஒட்டு மொத்தமாய்த் திரண்டு வந்து எல்லோரையும் காப்பாற்றியிருப்போமே... நீங்கள் எதற்காக இறங்குகிறீர்கள்..." என்று கேட்டார்கள். ஆற்றில்

       பிரம்மராயர் கையமர்த்தினார்.

       "வந்தவர்கள் அனைவரையும் காப்பாற்றி விட்டோம். கரையின் எதிர்ப்பக்கம் மூன்று வண்டிகள் இருக்கின்றன. அந்த வண்டிகளில் ஒன்றில் ஒரு மரப்பெட்டி இருக்கிறது. அந்த மரப்பெட்டி வண்டிக்குக் கீழே கட்டப்பட்டிருக்கிறது. அந்த மரப்பெட்டி மிக முக்கியம். அது உடையார் ஸ்ரீஇராஜராஜத் தேவரின் சொத்து, எப்பாடு பட்டாவது நீங்கள் அதைக் காப்பாற்றியாக வேண்டும். நீச்சல் தெரிந்தவர்கள் அருகே வாருங்கள். மற்றவர்கள் சற்று விலகிக் கொள்ளுங்கள்." என்று கட்டளையிட்டார்,

       தீப்பந்தங்கள் மறுபடியும் மண்ணில் நடப்பட்டன, நீச்சல் தெரிந்த வீரர்கள் ஆறேழு பேர் வந்து நிற்க, ஐந்து வேளாளர்களையும், நல்ல திடகாத்திரமாயிருந்த ஒரு அத்தண இளைஞனையும் அவர் தேர்ந்தெடுத்தார்.

       மிதவைப் பானைகளையும், மூங்கில் கட்டைகளையும் கொண்டு வரச் சொன்னார். மற்ற கூட்டத்தினர் ஊரை எழுப்பி சாமான்கள் கொண்டு வர ஓடினார்கள். தீப்பந்தங்கள் முன்னும் பின்னும் இருட்டில் அலைந்தன.

       "இன்னமும் அதிக தீப்பந்தங்கள் வேண்டுமென்று நினைக்கிறேன். கரை முழுவதும் வெளிச்சம் இருப்பது நல்லது. ஊரை எழுப்புங்கள். அவசியமானால் அடுத்த ஊருக்கும் தகவல் தெரிவியுங்கள்."

       இரண்டு பேர் அடுத்த ஊருக்கு ஓடினார்கள்.

       குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த தேவரடியார் பெண்களைப் பழமர்நேரி கிராமத்து அந்தணப்பெண்கள் கைப்பிடித்து வரவேற்றார்கள். போர்வை போர்த்தி கிராமத் திற்குள் கூட்டிக்கொண்டு போனார்கள். 'மாற்றுடைக்கு ஏற்பாடு செய்கிறோம்... வாருங்கள்' என்று அன்போடு அழைத்துக் கொண்டார்கள்.

       வந்த தேவரடியார் பெண்களில் மிக இளமையாக இருந்த ஒரு பதினாறு வயதுப் பெண்ணை, அவள் நடக்க முடியாமல் திணறுவது கண்டு, ஒரு அந்தணப் பெண்மணி சட்டென்று தூக்கித்தோளில் போட்டுக் கொண்டாள். குலுங்கிக் குலுங்கி அக்ரஹாரம் நோக்கி விரைவாக நடந்தாள். தீப்பந்தங்கள் பிடித்துக் கொண்டு இரண்டு வாலிபர்கள் அந்தக் கூட்டத்தோடு ஓடினார்கள்.

       "ஐயன், ஆற்றில் நட்டு வைக்கப்படும் கம்பை வெள்ளம் பறித்துக் கொண்டு போய்விடும் என்பதற்காகவும். ஆழமாக கம்பை ஊன்றுவதற்காகவும், கம்பு அசையாமல் நிற்பதற்காகவும் அங்கு கற்குவியல் போடப்பட்டிருந்திருக்கிறது. அந்தக் கற்குவியலின் மீது மாட்டு வண்டி ஏறி கவிழ்ந்து விட்டிருக்கிறது. வண்டி புரண்டு போகாமல் அங்கேயே நிற்பதற்குக் காரணமும் கற்குவியல்தான். இதுவே மணலில் மாட்டு வண்டி கவிழ்ந் திருந்தால் மண் பறிக்கப்பட்டு நகர்ந்து போயிருக்கும். வண்டி பலமுறை உருட்டப்பட்டிருக்கும்.

       நீங்கள் சொல்வதைப் பார்க்கும்போது, பெட்டியின் கனத்தால் மாட்டு வண்டி நிறுத்தப்பட்டிருக்கிறது. கற்குவியலால் புரளாமல் அப்படியே இருக்கிறது. எனவே மாட்டு வண்டியிலிருந்து பெட்டியை மட்டும் தனியே விடுவித்துக் கொண்டு வருவதே நல்லது என்று தோன்றுகிறது..." ஒரு வேளாளப் பெரியவர் கூர்ந்து கவனித்துப் பேசினார்.

       "இல்லை வேளாளரே... அப்படிச் செய்வதற்கு இயலாது."

       பிரம்மராயரால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிராமண இளைஞன் சட்டென்று பேசினான். எல்லோரும் அவனைத் திரும்பிப் பார்த்தார்கள்.

       "நீங்கள் பெட்டியை மாட்டு வண்டியிலிருந்து விடுவித்தால், மாட்டு வண்டியை நகர்த்துகிறபோது பெட்டி உடையக்கூடும். கிட்டத்தட்ட நான்கு நாழிகைகளாக தண்ணீரில் மூழ்கியிருக்கும் இந்த மரப்பெட்டி என்ன வலுவில் இருக்கும் என்பதை உங்களால் சொல்ல முடியாது.

       அதுவும் தவிர, உள்ளே இருப்பது தோலால் செய்யப்பட்ட வரைபடங்கள். தோலும் தண்ணீரில் ஊறி கனமாகியிருக்கும். எனவே மாட்டு வண்டி, பெட்டி இரண்டுக்கும் மூங்கில் கழிகள் அண்டக் கொடுத்து தோளில் தூக்கிக் கரையேறுவதே நல்லது..."

       "என்ன விளையாடுகிறாய் தம்பி? இத்தனை கனத்தை தோளில் வைத்துக் கொண்டு வரவேண்டுமென்றால், எவ்வளவு பேர் வேண்டுமென்று நினைக்கிறாய்...? நூறு பேர் இல்லாமல் இத்தனை பெரிய மாட்டு வண்டியைக் கரையேற்ற முடியுமா? மாட்டு வண்டியைவிட உள்ளே இருக்கிற பெட்டி முக்கியமென்றால் பெட்டியைத் தனியே பிரித்து விடலாம். மாட்டு வண்டியை உருட்டி ஆற்றோடு அனுப்பி விடலாம். என்ன செய்வதென்பதைப் பெரியவர்கள் தீர்மானிக்க வேண்டும்."- வேறொரு வேளாள இளைஞன் முன் வந்து பதில் சொன்னான்.

       எல்லோரும் கவலையோடு மாட்டு வண்டியைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். கோல் நட்டுக் காத்துக் கொண்டிருந்த படகோட்டி உரக்கக் கத்தினான்.

       "வெள்ளம் அதிகமாகிப் போய்க் கொண்டே இருக்கிறது. ஒரு நாழிகைக்கு ஒரு முழம் ஏறுகிறது..." என்று கூச்சலிட்டான்.

       அவன் பழமர்நேரி படகோட்டி. அவனுக்கு ஆற்றின் எல்லாப் பகுதியும் அத்துப்படி. வெள்ளத்தின் நெளிவு சுளிவுகள் அத்தனையும் தலைமுறை தலைமுறையாய் அறிந்தவன். அவன் பேச்சு எல்லோருக்கும் கலவரத்தைக் கொடுத்தது.

       "மாட்டுவண்டி எனக்கு முக்கியமில்லை. பெட்டி முக்கியம். மாட்டு வண்டிக்குள் இவர்களுடைய உடைமைகள் ஏதேனும் இருக்கலாம். அதைப் பற்றியும் அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். அந்தப் பெண்கள் எங்கே?"

       பிரம்மராயர் கேட்டார். 'அவர்கள் அக்ரஹாரத்துக்கு அழைத்துப் போகப்பட்டு விட்டார்கள்' என்று பதில் வந்தது.

       "இல்லை. நான் போகவில்லை..." பிரம்மராயரால் காப்பாற்றப்பட்ட இராஜராஜீ மரத்தடியிலிருந்து வெளியே வந்தாள்.

       மேலே யாரோ ஒருவர் கொடுத்திரூந்த மெல்லிய வேட்டியை போர்த்தியிருந்தாள். தலையிலிருந்து நீர் சொட்டிக் கொண்டிருந்தது. நெற்றியில் குங்குமம் கலைந்திருந்து. முகத்திலிருந்து இன்னும் பயம் விலகாமல் இருந்தது. வேட்டியின் மீது பொட்டுப் பொட்டாய் ரத்தக் கறைகள் தெரிந்தன.

       "ஏனம்மா...இன்னும் ரத்தம் வருகிறதா..." பிரம்மராயர் கவலையோடு கேட்டார்.

       "இல்லை ஐயா... ரத்தம் நின்று விட்டது. ஆனால் வலி அதிகமாக இருக்கிறது..."

       "கடவுளே...இதோ... வைத்தியரை ஏற்பாடு செய்கிறேன். பெட்டியைத் தவிர, வரைபடங்கள் தவிர மாட்டு வண்டியில் இன்னும் வேறென்ன இருக்கிறது?''

       "மாட்டு வண்டியின் மேற்கூரையில் மூன்று ஓலைக் குழல்கள் சொருகப்பட்டுள்ளன. மூன்று குழல்களில் ஒன்று என்னுடையது. மற்ற இரண்டு குழல்கள் மற்ற இரண்டு தேவரடியார்களுடையது..."

 

மேலும் படிக்க...

Post a Comment

0 Comments