உடையார்
3
பிரம்மராயர் கலவரத்துடன் புரண்டு கிடக்கும் மாட்டு வண்டியைப் பார்த்தார். மாட்டு வண்டி இன்னும் ஒரு நாழிகையில் நீருக்கடியில் போகும் என்று வெள்ளத்தின் வேகத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ள முடிந்தது.
பயணம் செய்தவர்களைக் கரையேற்றுவதற்கே எல்லோரும் முக்கியமாக முயன்று கொண்டிருப்பதால் மாட்டு வண்டியைப் பற்றின அக்கறை எவருக்கும் வரவில்லை. ஒருவேளை நீரோடு அடித்துக்கொண்டு போனாலும் போகட்டும். வேறு எங்கேனும் கரை ஒதுங்கும்போது எடுத்துக் கொள்ளலாம்' என்று சகலரும் சிந்தித்திருக்க வேண்டும்.
ஆனால் மாட்டு வண்டிக்குள் இப்படி கோயிலுக்கான வரைபடங்கள் இருக்கிறது என்று முன்னே தெரிந்திருந்தால், பிரம்மராயரும் கமலக்கண்ணனும் மனிதர்களை விட்டுவிட்டு மாட்டு வண்டியைக் கரை ஏற்றுவதற்கே அதிகம் முயற்சித் திருப்பார்கள். ஆனால் நிச்சயம் இரண்டு பேராவது இறந்து போயிருப்பார்கள்.
இதை நல்லவேளை என்று சொல்வதா? கெட்டவேளை என்று சொல்வதா?
மனிதர்கள் இருந்ததால் மாட்டு வண்டியைப் பற்றி அக்கறை அற்றுப் போயிற்று. மீட்சு முடியுமா என்று இப்போது தெரியாமல் இருக்கிறது. மாட்டு வண்டியைப் பற்றி அக்கறைப் பட்டிருந்தால் மனிதர்களை நிச்சயமாக இழந்திருப்போம்.
இந்த மனிதர்கள் கோயிலுக்கென்று தஞ்சைக்கு வந்தவர்கள். மன்னரின் ஆணைப்படி குடிபெயர்ந்தவர்கள். பரம்பரை பரம்பரையாய் வசித்து வந்த தங்களுடைய சொந்த இருப்பிடத்தை விட்டுவிட்டு, இது வரை பார்த்தேயிராத ஒரு ஊருக்கு மன்னனின் ஆணை என்று பயணப்பட்டவர்கள். சொந்த ஊரிலிருந்து கிளம்பும்போது, விம்மி விம்மி அழுது எல்லோரையும் வணங்கி, இனி திரும்புவது சந்தேகம்தான் என்பதுபோல இங்கு வந்திருப்பவர்கள். அவர்களை இன்னமும் மரியாதையாக வரவேற்றிருக்க வேண்டும்.
ஆனால் காவிரித்தாய் கவிழ்த்து விட்டு வேடிக்கை பார்க்கிறாள். மனிதர்களைக் கவிழ்த்தது மட்டுமல்லாமல் கோவில் கட்டுவதற்கு வேண்டிய அடிப்படையான உதவி களையும் பிடுங்கிக்கொண்டு முரட்டுத்தனமாய் நிற்கிறாள்.
காவிரியின் நீர்வேகம் குறைந்தால் மாட்டு வண்டியை இழுப்பது எளிது. இல்லையெனில் மாட்டு வண்டி உடையக் கூடும். பெட்டி திறக்கக்கூடும், பெட்டி திறந்தால், உள்ளுக்குள்ளே இருக்கின்ற மெல்லிய மாட்டுத் தோல்களில் எழுதப்பட்ட வரைபடங்கள், மூலைக்கொன்றாய் சிதறக்கூடும். மறுபடியும் வரைபடங்கள் எழுதுவதுதென்பது சாதாரண விஷயமல்ல.
‘வரைபடங்கள் தஞ்சை நோக்கி வந்தன. வழியில் காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன' என்று மன்னர் கேள்விப்பட்டால் அதை அச்சான்யமாக நினைப்பார், கோவில் கட்டுவது அவசியமா என்ற கேள்வி பலர் மனதில் எழுந்துவிடும்.
வரைபடங்கள் கிடைத்து விட்டால் மாட்டு வண்டி கவிழ்ந்ததை மறைத்து விடலாம். பெண்களை இதைப்பற்றி அதிசும் பேச வேண்டாம் என்று சொல்லிவிடலாம். வரைபடங்கள் நன்கு வந்து சேர்ந்தன என்று மன்னருக்குச் செய்தி தெரிவிக்கலாம்.
பெண்கள் மட்டும் கரையேறி, வரைப்படங்கள் ஆற்றோடு போய் விட்டன என்றால், மன்னர் என்ன செய்வார் என்று சொல்ல இயலாது.
'யார் அது - துணையின்றி பெண்களிடம் வரைபடங்கள் கொடுத்தனுப்பியது' என்று சீற ஆரம்பித்தாரென்றால் பல்வேறு அதிகாரிகளுக்கு மண்டகப்படி நிச்சயம் கிடைக்கும்.
சோழ மாமன்னர் உடையார் ஸ்ரீஇராஜராஜத்தேவர் கோபமான குணம் உடையவரல்லர். தவறுகளை கேலியாகக் கண்டிக்கக் கூடியவர்.
தான் கோபித்துக் கொண்டால் மக்கள் மனதில் அது வலுவாகப் பதிந்துவிடும். அது மற்றவர்களுக்கு முன்பாய் மிகப்பெரிய இழிவாய் அவர்களுக்குப் போய் விடும். நல்ல வேலைக்காரர்கள் இதனால் மனமுடைந்து போய் விடுவார்கள்.
பிற்பாடு பாராட்டினாலும், 'அன்று கோபித்துக் கொண்டீர்களே' என்று வருத்தப்படுவார்கள் என்பதால், எவரையும் கோபிக்காமல் தவறுகளை மெல்லியதாய்ச் சுட்டிக் காட்டி, 'வேறு விதமாய் செய்வதற்கு இயலுமா' என்று அன்பாகச் சொல்லி, 'உங்களால் முடியும்' என்று உற்சாகப் படுத்தி நகர்ந்து விடுவார்.
ஆனால் உடையார் ஸ்ரீ இராஜராஜத்தேவர் கோபித்துக் கொண்ட நேரங்களையும் பிரம்மராயர் பார்த்திருக்கிறார்.
உடையார் ஸ்ரீ இராஜராஜத்தேவரின் தமையனார் ஆதித்த கரிகாலன் கொலை செய்யப்பட்டு, பத்தொன்பது வருடங் களுக்குப் பிறகு இன்னார்தான் கொலை செய்தார் என்று கண்டுபிடிக்கப்பட்டு, கண்டு பிடிக்கப்பட்டவர்கள் விதவிதமாய் விசாரிக்கப்பட்டு, குற்றம் ருசுப்படுத்தப்பட்டு, அதன் காரணங்கள் தெளிவான பிறகு, அது குறித்து வருத்தி சற்றுநேரம் அமைதியாக இருந்த உடையார் திடீரென்று உதறி எழுந்து,
"கொலையாளிகளின் சொத்து மட்டுமல்லாமல், அவர்கள் உறவினர்கள் சொத்து முழுவதும் உடனடியாகக் கைக்கொள்ளப்பட வேண்டும், கொலையாளியின் தாய், தந்தை, சிற்றப்பன், சிற்றன்னை, பெரியப்பன், பெரியன்னை, அத்தை, மாமன் அத்தனை வகையினரும், இவர்கன் மகள்களுக்குப் பெண் கொடுத்தவர்களும், இவர்கள் பேரன், பேத்திகளுக்குப் பெண் கொடுத்தவர்களும், பிள்ளை கொடுத்தவர்களும், இவர்கள் வீட்டில் சம்பந்தம் செய்த அத்தனை பேரும், அத்தனை தூரத்து உறவினர்களுடைய சொத்துக்களும் இந்தக் கணம் முதல் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்கள் அத்தனை பேரும் சோழ தேசத்திலிருந்து இன்று பொழுது சாய்வதற்குள் வெளியேற்றப் பட வேண்டும் என்று விரும்புகின்றேன்.
எதிர்த்து எவரேனும் பேசினால் அவர்கள் தலை துண்டிக்கப்படலாம். பெண்கள் முரட்டுத்தனம் செய்தால் நாக்கு அறுக்கலாம். மீறி ஆயுதம் தாங்கினால் மூக்கும், முலையும் அறுத்துத் துரத்தலாம்..."என்று சீறலாய்க் கட்டளையிட, உடனே கொலையாளிகளின் உறவினர்கள் வேசுமாகத் திரட்டப்பட்டு, நடுச்சபையில் நிறுத்தி வைக்கப்பட்டார்கள். உடையார் இராஜராஜத்தேவர் முன்பு இன்னார், இன்னின்ன உறவினர்கள் என்று அறிமுகப்படுத்தப்பட்டார்கள்.
தங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று அந்த உறவினர்கள் கதறினார்கள். எந்த பாவமும் செய்யாத எங்களைத் தண்டிக்கிறீர்களே, என்று பெண்கள் புலம்பினர். 'பொறுமையற்ற அரசனாய் இருக்கிறீர்களே... விசாரிக்காமல் தீர்ப்பு சொல்கிறீர்களே.' என்று அந்தக் கூட்டத்தில் முதியவர்கள் உரக்கக் கத்திய போது, கண்கள் சிவக்க, உடையார் ஸ்ரீஇராஜராஜத்தேவர் ஆசனத்திலிருந்து எழுந்து, வாளை உருவி அந்தப் பெரியவர் முகத்திற்கெதிரே நீட்டிப் பேசியது இன்னும் நினைவில் இருக்கிறது.
நீங்கள்தான் என்று தெரியும். உங்கள் ஊரிலிருந்துதான் கிளம்பினார்கள் என்று தெரியும், உங்கள் கிராமத்தில்தான் ரகசியக்கூட்டங்கள் போடப்பட்டன என்று தெரியும். உங்கள் கிராமத்திலிருந்து சோழ தேசத்திற்கு எதிராக ஆட்கள் கினம்புகிறார்கள் என்று தெரியும். உங்கள் கூட்டத்தின் திமிர் தெரியும். அகம்பாவம் தெரியும். ஆத்திரம் தெரியும். சூழ்ச்சி தெரியும், உங்களைப் பல வருடங்களுக்கு முன்பே அடித்து நொறுக்கியிருக்க வேண்டும் கிராமம் முழுவதும் அழித்து, ஒரு வீடுகூட இல்லாமல் தரைமட்டமாக்கியிருக்க வேண்டும், நான் பத்தொன்பது வருடங்கள் பொறுமை காத்தேன்.
மேலும் படிக்க...
0 Comments